Tuesday, March 1, 2011

தீ -விட- வாதம்

ஓர் உரையாடல்.
கண் மையிருட்டில்
நட்சத்திரங்கள் கண் சிமிட்ட
தூக்கமின்றி திரிந்தேன்
ஒளிந்தபடியே ஒருவன்
நிலவுக்குத் துணையாக
சுற்றும் முற்றும் பார்த்தபடி
மரத்தின் அடியே
மயங்கி விழுந்தான்.
புயம் கொண்டுத் தூக்கி
அவனுக்கு தஞ்சம் கொடுத்தேன்
வீட்டினுள்ளே..
நெற்றியிலே பலத்த காயம்
நீண்ட பயணத்தினாலான களைப்பு
மயக்கத்திலேயிருந்தான் .
ரத்தம் துடைத்து படுக்கவைத்தேன்
காயத்திற்கு மருந்துப் போட்டேன்
கண்திறக்காதிருந்தான்.
அசந்து தூங்கியவனை
அசராமல் பார்த்தேன்
சிறிதுநேரம் ஆயிற்று
சுவரிலே சாய்ந்தபடி
நானும் தூங்கிப்போனேன்
காலை எழுந்தும் பொது
காணமல் போயிருப்பான் -என
நினைத்துக் கண்விழித்தேன்
நான் எண்ணியது தவறு
துவண்டு அங்கேயே படுத்திருந்தான் .
கண் விழித்துப் பார்த்தான்

எழுந்தமர்ந்து கேட்டான்

நான் எங்கே இருகின்றேனென்று ?

விவரம் சொன்னேன் பட்டும்படாமல்

வினவிய அவன் வினாவாக நின்றான்.

மெல்ல கேள்வியை ஆரம்பித்தேன்

"யார் நீ ? எங்கிருந்தாய்? எங்கு வந்தாயென்று"

கண்கள் செந்நிறமாக கர்ஜித்தான்

"படை ஒன்று திரட்டுகின்றோம்

பாவப்பட்ட நாங்கள்

கட்ட ஒரு கோவணமின்றி

காட்டில் வாழும் மக்கள் ,

திசைத் தெரியாமல் போகும் - எமக்கு

விசை ஒன்று இருக்கு

கசப்பான நிகழ்வு பல

நெஞ்சுக்குள்ளே இருக்கு..
.
எந்தையை சுட்டான்

என் தாயையும் கொன்றான்

தங்கையை சூறையாடி -பல

கன்னியர் கற்பை அளித்தான்
.
வஞ்சம் தீர்க்க வேண்டியே - இங்கு

தஞ்சம் புகுந்துள்ளோம்

கஞ்சி சோறு இல்லாவிடினும்

அஞ்சி ஓட மாட்டோம்.

அறியாத மக்களுக்கு

நாங்கள் தீவிரவாதி

தெரிந்த மக்களுக்கு

நாங்கள் ஞாயவாதி .



அதிர்ச்சியாய் இருந்தது

அவன் சொன்ன கதை கேட்டு

முதிர்ச்சி அற்ற வார்த்தைகளால்

நகர்ந்தேன் அவனை விட்டு

சிறிது மௌனத்திற்குப் பின்

"போராடும் வாழ்க்கையில்

ஓர் அர்த்தம் வேண்டும் தோழா

உன் துயரம் புரிகிறது

அதற்கு மறுப்பு இல்லை தோழா

போன உயிர் திரும்பிடுமோ

வஞ்சம் விடுவாய் தோழா

கண்களை குருடாக்கிய

கத்தி அதை விட்டுவிட்டு

மற்றவர் கண்களை

பறிக்கும் செயலும் சரிதானோ!

தலைவன் அவன் தூண்டிவிட்டு

தொட்டிலிலே தூங்குகின்றான் .

பகடைக்காயாய் பயன்படுத்தி

வியாபாரமாய் மாற்றுகின்றான்

போன உயிர் விதியினாலே என்று

நீயும் எண்ணிடுவாய்..

மனம் அதனை ஒருநிலைப்படுத்தி

துயரத்தைப் போக்கிடுவாய்".

"அறிவுரையை நிறுத்திடுவாய்" என

ஆத்திரத்தில் கத்தினான்.

"பாசாங்கு சொல்லிடவும்

பல் இளித்து பேசிடவும்

தெருவில் போட்ட சோற்றை

நக்கித் திங்க வரவில்லை

கதை ஒன்று சொல்கிறேன்

கேட்டிடுவாய் தோழா

உங்களவர் எழுதியது

பெயரினிலே வெற்றியிருக்கும்

அவர் சொன்ன கதை இது

'ஒற்றையாய் சுற்றிய

வெட்டியானாம்..

அவன் பிணம் வரும்போதெல்லாம்

பாடுவானாம்

தனக்கென வந்தாளாம்

துணை ஒருத்தி

குழந்தையும் பிறந்ததாம் - அவன்

குடும்பம் விருத்தி

ஒரு நாள் குழந்தையும்

காணலயாம்

தேடித் தேடித் பித்தாக

அலைந்தானாம்

கண்டானாம் குழந்தையை

பிணமாக...

அன்றோடு நிறுத்தினானாம்

பாடுவதை '..

தனக்கென்று வந்தால் தான்

தெரியுமடா

தசை கிழிந்து வரும் வலியும்

புரியுமடா

மெத்தை சுகம் கண்ட உனக்கு

மெய் புரியாது

பொய்யான வாழ்கையை யார்

வாழ்கிறார் என்று...


மென்மையாக ஆரம்பித்தேன் என் பேச்சினை


"நாவடக்கம் வேண்டும் தோழா

நன்றி மறவாதே

நானும் சூழ்நிலைக் கைதி தான்

அதை மறந்திடாதே

உன்னை போல் ஒருவனால்

அன்னை இழந்தேன்

தோழனாகப் பாவித்த

தந்தை இழந்தேன்

கோபம் கொண்டு எழுந்திருந்தால்

மனிதனாகிருப்பேன்

சீற்றம் அதை அடக்கியே

மனிதம் வளர்த்திட்டேன்.

பசிக்கு வேட்டையாடல்

அது உயிரினத்தின் தர்மம்

அறிந்தே பழித் தீர்ப்பது

மனதின் வன்மம்.

தீர்வுக்கு வழி தேடினால்

தானாகப் பிறக்கும்

வரும் தீர்வை மடக்கினால்

போர்களமே வெடிக்கும்

மனதினிலே மாற்றம்

கொண்டால்

பூமி சொர்க்கமாகும்

உனை சார்ந்தோர்க்கு

அன்பு காட்டு

புது உறவு கிடைக்கும்.."


"அமைதியாக யோசி நண்பா

விளக்கம் கிடைக்கும்" எனத்

தனிமையில் விட்டு சென்றேன்
..
...

No comments:

Post a Comment