Tuesday, January 17, 2012

கண்மணியே ஏன் மறந்தாய்

தோள்களிலே உனை தாங்கி
தாலாட்டு பாடினேனே
வாயினிலே இட்ட சோறு
வயிற்றுக்குள் போவதற்குள்
அழு குரல் கேட்டவுடன்
அன்னத்தை தள்ளி வைத்து
அணைக்க வந்த கரங்களையே
ஏன் மறந்தாய் கண்மணியே !

கண்ணுறக்கம் இல்லாமல் - என்
கால்களிலே தான் சுமந்தேன்
நோய் நொடி அண்டாமல்
நாளாகப் பார்த்திருந்தேன்
காயாத கனியமுதே
கண்மணியே ஏன் மறந்தாய் !

தேனாக பேசுவியே
தெவிட்டாத கனி அமுதே
மானாக ஓடி வந்து
மடியினிலே தலை புதைப்பாய்
தாயாக பெற்றெடுத்தேன்
தங்கமே என் கற்கண்டே
சீராக பார்த்தேன் உனை
சீற்றம் ஏன் கொண்டாயடா !

வயதாகி போனதுவோ
வழித் தடங்கல் மறந்தனவோ
கை கால்கள் விழுதனவோ - உனக்கு
பாரமாக ஆகினேனோ
குழந்தையாய் ஆனேனடா
குறைகளை அதை பாராயடா
குமரனாய் இருந்து விட யாரும்
வரங்களை பெற வில்லையடா !

முது வயதும் ஒரு நாள் வந்திடுமே
உன்னால் மறுக்கயிலாதடா
என் அருமை மகனே நீயும்
எனை மறந்து போனாயடா
காலன் என்னை தொட்டப் பின்பும்
கண்மணியே உனை மறவேனடா!

No comments:

Post a Comment