Thursday, December 15, 2011

சிங்காரச் சென்னை

ஊரு நல்ல ஊரு
அதுக்கு சென்னைநு பேரு
நூறு ரூபா நோட்ட சுருட்டி
காது குடையும் ஊரு

வீட்டுக்கொரு காரிருக்கு - இங்க
காருக்குக் காரு துணையிருக்கு
வீடே இல்லாம ஆளிருக்கு - அதை
ஏன் கேட்கவும் ஆள் இருக்கு .

சாதி இருக்கு சங்கம் இருக்கு
ஊர சுத்தி சாக்கட இருக்கு - அதுல
ஊறி போன மனுஷனுக்கு
உறவுக்காரன் மறந்திருக்கு

நீளமான கடல் இருக்கு
கடலோரம் பல சிலை இருக்கு
பல தலைவர்களின் சமாதிகள்
பார்க்கும் சுற்றுலா தளமாயிருக்கு

கோயிலிருக்கு குளமிருக்கு - சில
குளத்துல தண்ணி வத்திருக்கு
ஆடி மாசம் வந்து போனால்
கூழ் ஊத்த ஆள் இருக்கு

பள பளக்கும் ரோடிருக்கு - அதுல
பயணம் செய்ய சிலருக்குத் தான்
கொடுப்பினை இருக்கு

ரோடா? கல் மேடா?
அழும் வாகனத்தை கேட்டா
கொடுக்கும் கணக்கு

தெருவுக்கு தெரு விளக்கிருக்கு
அதுல ஒன்னு ரெண்டு கண் சிமிட்டும்
சூரியனும் போயே போச்சுன்னு
சில விளக்குகள் தூங்க செய்யும்

மந்திரி வீடா, மந்திரி மகன் வீடா
அங்க மட்டும் விளக்கெரியும் - ஆனா
மாசமாசம் வரியா கட்டும்
மனுஷன் வயித்துல தான் விளக்கெரியும்

ஊருக்குள்ளே மலைகள் போலே
குப்பைகளும் குவிந்திருக்கும்
குப்பைத் தொட்டினு பேரிருக்கும் - அதுவும்
குப்பையோடு குப்பையா கிடக்கும்

நாற்றத்தோடு காற்று வரும் - அது
கொசுக்களையும் அழைத்துவரும்
கொசுக்களும் பறந்து வந்து
இலவசமா நோய்கள் தரும்

வீதிக்கொரு கோயில் கட்டு
அது அந்த காலம்
வீதிக்கொரு சாராயக் கடை
இது இந்த காலம்

வீதியோரம் மரம் நடுங்கள்
அது அந்தக் காலம்
மரமில்லாமல் தண்ணீர் பாய்ச்சுவோம்
இது இந்த காலம்

சுவரெல்லாம் சுவரொட்டிகள் - அதை
ரசிப்பவங்க நாங்க ..
மறைமுகமா கால்நடைக்கு
உணவு அளிப்பவங்க..

ஆயிரம் குறைகள் இருந்திடினும்
இது எங்க ஊரு தான்
எல்லாம் ஒன்றாய் கூடி
வாழும் சிங்கார சென்னை தான்..

No comments:

Post a Comment